search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா போலீஸ்"

    கேரளாவில் சைக்கிளில் வேகமாக சென்றதாகவும், ஹெல்மெட் அணியாததாலும் இளைஞர் ஒருவரிடம் போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KeralaPolice #CycleOverspeedFine
    திருவனந்தபுரம்:

    உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காசிம் என்ற இறைஞர் கேரளாவின் கும்பாலாவில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவரை மறித்த நெடுஞ்சாலை காவல்துறையினர், வேகமாக சைக்கிள் ஓட்டியதாகவும், ஹெல்மெட் போடவில்லை என்றும் கூறி 2000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.



    2000 ரூபாய் அபராதம் வாங்கிவிட்டு 500 ரூபாய்க்கு மட்டும் ரசீது கொடுத்து அந்த இளைஞரை அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KeralaPolice #CycleOverspeedFine


    கேரளாவில் போலீஸ் நிலைய காவலில் இருந்த விசாரணை கைதியை அடித்துக் கொன்றது தொடர்பான வழக்கில் 6 போலீசாருக்கு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் தண்டனை அறிவிக்கப்படுகிறது. #KeralaPolice
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவரது மகன் உதயகுமார், (வயது 30). திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள இரும்புக்கடையில் உதயகுமார் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இரவில் உதயகுமாரும், அவரது நண்பர் சுரேஷ்குமார் என்பவரும் ஸ்ரீகண்டேஷ்வரம் பகுதியில் நடந்து சென்றனர்.

    அவர்களை கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். சுரேஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    உதயகுமார் கையில் ரூ.4 ஆயிரம் பணம் இருந்தது. இதனால் அவரையும் போலீசார், போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் பணம் வைத்திருந்தது பற்றி கேட்டனர். அவர், ஓணம் பண்டிகைக்காக கடை உரிமையாளர் அளித்த போனஸ் பணம் என்று கூறினார்.

    இதை நம்ப மறுத்த போலீசார் அவரை அடித்து உதைத்தனர். மறுநாள் அவரை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்து போனார்.

    இந்த சம்பவம் குறித்து உதயகுமாரின் தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் மகனை அடித்து கொன்றுவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனு கொடுத்தார்.


    அந்த மனு மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பிரபாவதி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு உதயகுமார் மரணம் தொடர்பான மர்மத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து உதயகுமார் சாவு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.

    சி.பி.ஐ. விசாரணையில் திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதில், சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் ஆகியோருக்கு வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாகவும், மற்றவர்கள் சதி திட்டம் தீட்டுதல், ஆதாரங்களை அழித்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதை சி.பி.ஐ. கண்டுபிடித்து சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அறிவித்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் அறவித்தார்.

    இதில், ஏட்டு சோமன் இறந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறினார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார். நேற்று கோர்ட்டில் தீர்ப்பை கேட்பதற்காக ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர்.

    மற்ற 3 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி கூறி உள்ளார்.அவர்களும் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதும் கைது செய்யப்படுவார்கள்.

    கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாரபுழா போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீஜித் என்ற வாலிபர் மரணமடைந்தார். இவரும் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    மாநில மனித உரிமை கமி‌ஷனும், போலீசாரின் செயல்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சில போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் குற்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார். இதில், கொலை முயற்சி, பாலியல் புகார்கள், பணமோசடி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக 59 போலீசார் மீது குற்றம் சாட்டுக்கள் கூறப்பட்டது.

    இதில் 10 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் மீது விரைவில் நடவடிக்கை இருக்குமென்று தெரிகிறது. #KeralaPolice
    கேரளாவில் பெண் போலீஸ் ஒருவர் போலீஸ்காரருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி செல்போன் மூலம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    செல்போனில் படம் பிடிக்கப்படும் அந்தரங்க காட்சிகள் வெட்டவெளிச்சமாகி பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    தற்போது கேரளாவில் பெண் போலீஸ் ஒருவர் போலீஸ்காரருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி செல்போன் மூலம் வாட்ஸ்-அப்பில் பரவியதால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த காட்சியை அந்த பெண் போலீஸ், தான் இணைந்துள்ள வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி உள்ளார். தானும் அந்த போலீஸ்காரரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அதில் அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த காட்சியை யாரோ மற்ற வாட்ஸ்-அப் குரூப்களிலும் பரவவிட்டதால் தற்போது அது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

    இதைதொடர்ந்து இந்த விவகாரம் கேரள உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். விசாரணையில் அந்த பெண் போலீஸ்காரர் மாலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றுவது தெரிய வந்தது.

    இதைதொடர்ந்து அவரை கேரளாவில் உள்ள வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில் இந்த காட்சியை பரப்பியவர்கள் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள ஒரு போலீஸ்காரர் தான் இந்த காட்சியை பரப்பியவர் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் போலீஸ் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×